திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக டைரக்டர் சேரன் பதவி ஏற்றார்! விசி குகநாதன் வாழ்த்து!!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர், திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான வி.சி.குகநாதன் அவர்கள்.
தேர்தல் அதிகாரி உமாசங்கர் பாபு முன்னிலையில்.. தலைவராக பிரபல இயக்குனர் சேரன், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் துணை தலைவராக கவிஞர் சினேகன் இணை செயலாளர்களாக ரவி மரியா வி. பிரபாகர் மற்றும் நிர்வாகிகளும், ஆர் வி உதயகுமார் பேரரசு உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றார்கள்.
தலைவர் சேரன் அனைவரையும் வரவேற்று பேசும் போது “சங்கத்தின் நலனுக்காக நாம் இணைந்து சிறப்புடன் செயல்படுவோம்” என்று குறிப்பிட்டார்.
“இனி இங்கு இரண்டு அணிகள் இல்லை, எல்லோரும் ஒரே அணிதான். சங்கத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையாக செயல்படுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார் வி.சி.குகநாதன்.

