“திரையுலகப் போராளி” தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை! காரணம் என்ன? முக ஸ்டாலின் சரத்குமார் இரங்கல்!!
தமிழ் திரையுலகின் நன்மைக்காக பல போராட்டங்கள் நடத்திய “திரையுலக போராளி” கே ராஜன் இன்று மாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தயாரிப்பாளர் கே ராஜன் 1983 ஆம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தில் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பிரபுதேவா மீனா நடித்த டபுள்ஸ், பார்த்திபன் நடித்த நினைக்காத நாளில்லை உட்பட சில படங்களை தயாரித்தார். ஒரு படத்தை இயக்கவும் செய்தார். பல படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். பலபடங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக போட்டிட்டு வெற்றி பெற்றார். தற்போது அந்த சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
சிறுபடத் தயாரிப்பாளர்கள் மீது பெரும் அக்கறை கொண்டவர் கே ராஜன். அவர்களின் பட பூஜைகள் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் அனைத்திலும் முகம் சுளிக்காமல் கலந்து கொண்டு அந்த படங்களை பற்றி பாராட்டிப் பேசி உற்சாகப்படுத்துவார்.
அதேநேரம் பிரபல நடிகர்களின் சம்பள உயர்வு, பிரமோஷன் விஷயத்தில் ஒத்துழைப்பு தராத நடிகைகள் என எல்லாரையும் எந்தவித தயக்கமும் இன்றி மேடையில் வெளுத்து வாங்குவார். தொலைக்காட்சி மற்றும் யூடியூப் விவாதங்களிலும் மிகத் துணிச்சலாக தன் கருத்துக்களை பேசுவார். அதனால் அவருக்கு யாரும் பதிலடி தர தயங்குவார்கள்.
15 வருடங்களுக்கு முன்பு திருட்டு விசிடி விஸ்வரூபம் எடுத்து தியேட்டர் வசூலை கபளீகரம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் துணிச்சலாக திரைப்பட பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை உருவாக்கி, பர்மா பஜாருக்கு சென்று போராட்டம் நடத்தி திருட்டு விசிடி விற்ற கடைகளை அடித்து நொறுக்கினார். இதற்காக கைது செய்யப்பட்டார்.
சுமார் 40 வருடங்கள் திரைத்துறையில் பயணித்த கே ராஜன் பல தயாரிப்பாளர்களுக்கு கொடுத்திருந்த பல கோடி ரூபாய் பைனான்ஸ் திரும்பி வரவில்லை என்ற மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில வருடங்களாக ஜெமினி பிரிட்ஜ் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தான் அறை எடுத்து தங்கி இருந்தார். சமீபத்தில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றதை தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில்தான் இன்று காரில் வந்து கொண்டிருந்த போது அடையார் பாலத்தில் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கியவர் திடீரென்று ஆற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். எந்த பிரச்சினையையும் சவாலாக எடுத்து யாரையும் எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடிய ஆளுமை மிக்க ஒரு தயாரிப்பாளரின் திடீர்
மரணம் ஒட்டு மொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
எதனால் இப்படி ஒரு தவறான முடிவை மேற்கொண்டார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கே.ராஜனுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர்.
இவர் ராயபுரத்தில் காமராஜர் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளிக்கூடத்தையும் நடத்தி வருகிறார்.
-ஆதிராஜன்

