சூர்யாவின் “கருப்பு” பட விவகாரம்: ரூ.150 கோடி இழப்பீடு வேண்டும்! கியூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கங்கள் எச்சரிக்கை!!
நடிகர் சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட “கருப்பு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேற்று (14 மே 2026) ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ( இன்று ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது) ஆனால் தயாரிப்பாளர் பிரபு, பைனான்சியர்களுக்கு வட்டியுடன் தரவேண்டிய பெருந்தொகையை செட்டில்மெண்ட் செய்து என்ஓசி பெற முடியாததால் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாமல் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. இந்த சூழ்நிலையில் யாருடைய அனுமதியும் இல்லாமல் வட இந்தியாவில் மூன்று திரையரங்குகளில் மட்டும் கருப்பு படம் ரிலீஸ் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இது கியூப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகள் ஆகும். யாராவது தியேட்டரில் படம் பிடித்து மொத்த படத்தையும் இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டால் என்ன ஆகும் என்று பட தயாரிப்பாளரும் படக்குழுவினரும் பதறித் துடித்தனர். இதையறிந்த தயாரிப்பாளர்கள் சங்கங்களும் அதிர்ச்சி அடைந்தன. ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்ட நிலையை எண்ணி, இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு முக்கிய நிர்வாகிகள் கியூப் நிறுவனத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு இருந்தவர்கள் பொறுப்பாக பதில் சொல்லாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசன் துணைத் தலைவர் கமலக்கண்ணன் பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் இனண செயலாளர் சுஜாதா விஜயகுமார் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் டிஜி தியாகராஜன் ஆகியோர் கையொப்பமிட்டு ஓர் எச்சரிக்கை கடிதத்தை கியூப் நிறுவனத்திற்கு ( The Real Image Technologies Pvt Ltd, Mylapore) அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
M/s. Dream Warriors நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் திரு.சூர்யா அவர்கள் நடிப்பில் இன்று 14.5.2026, தங்களது Qube service provider மூலம் இந்தியா முழுவதும் வெளியாக இருந்த “கருப்பு” திரைப்படத்தினை சம்பந்தபட்ட தயாரிப்பாளர், பைனான்சியர் அனுமதியின்றி எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல், தங்களது நிர்வாகத்தின் கவன குறைவால் வட இந்தியாவில் மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. (Without permission from Producer/Financiar KDM was opened in North India) தமிழ் சினிமாவில் இதுநாள் வரையில் இது போன்று ஒரு சம்பவம் நடைபெற்றதில்லை. இதுவே முதல் முறை. இந்த விஷயமானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். மேலும், இதுபோன்ற விஷயங்களால் தயாரிப்பாளர்களின் content – க்கு எங்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
மேற்படி தங்களது நிர்வாகத்தின் கவன குறைவால் கருப்பு திரைபடத்தின் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய அளவில், ரூ.150 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அறிந்ததும் படத்தின் தயாரிப்பாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் QUBE நிறுவனத்திற்கு மதியம் 2 மணி அளவில் நேரில் வந்து இரவு 9 வரை காத்திருந்தும், தங்களது நிர்வாகத்திலிருந்து யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை, மேலும் நிர்வாகம் சார்பில் நேரில் சந்தித்து பேச வரும் அறிகுறியும் தென்படவில்லை.
ஆகவே அவசர நிலையாக கருதி உடனடியாக மேற்படி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தங்களது நிர்வாகம் எங்களது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள தயாரிப்பாளருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
அவ்வாறு நடக்காத பட்சத்தில் இனி வரும் காலங்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது QUBE Service provider – க்கு தொழில் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
***

