திரை விமர்சனம்: நானியின் ருத்ர தாண்டவம் ” பாரடைஸ்”!

திரை விமர்சனம்:  நானியின் ருத்ர தாண்டவம் ” பாரடைஸ்”!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நானி முன்னணி இயக்குனரான ஸ்ரீகாந்த் ஒடேலா ஆகியோர் கூட்டணியில் நம்ம ஊர் நாயகி “தமன்னா தங்கச்சி” கயாடுலோஹர் சத்யராஜ் ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்க அனிருத் இசையில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் படம் பாரடைஸ்.

1980களில் ஆந்திராவின் செகந்திராபாத் தில் ஒதுக்கப்பட்ட ஓர் இனக்குழு (சாவாரி) தங்களின் அடையாளத்திற்காகவும் வாக்குரிமைக்காகவும் ஆயுதம் ஏந்திப் போராடிய உண்மை சம்பவத்தை கற்பனை கலந்து அதிரடி ஆக்சன் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். 

அந்த இனத்தின் அடையாளத்திற்காக போராடும் ஷம்மக்கா என்ற துணிச்சலான தாயின் வயிற்றில் பிறக்கும் நானி, சிறு வயதில் வில்லன் மாலிக் மகனை அடிக்க கை ஓங்கியதால் சாகும் வரை அவமானப் பட வேண்டும் என்று கையில்”தே…யா மகன்” என்று பச்சை குத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார். சிறையில் வீரனாக வளரும் நானி மோகன் பாபு மகனின் அரசியல் ஆசையை எதிர்த்துப் போராடி, பிறகு தவறாக புரிந்து கொண்ட தாயின் தியாகத்தை உணர்ந்து அம்மாவின் கனவை நனவாக்க ஆவேசத்துடன் ஆயுதம் ஏந்துவது தான் கதை. அழகான நாயகனாக காதலித்து திரிந்த நானி, உடலை முறுக்கேற்றி தோற்றத்தையும் உடல் மொழியையும் மாற்றி கொண்டு அதிரடி சண்டை காட்சிகளில் சரவெடி காட்டுகிறார். தாயின் வலியை உணரும் காட்சிகளில் விருதுக்குரிய நடிப்பு சிறப்பு.

இந்த மக்களை சில தலைமுறைகளாக சாராயம் வெல்லம் காய்ச்சும் அடிமைகளாக வைத்திருக்கும் மோகன் பாபு கொடூர வில்லனாக மிரட்டியிருக்கிறார். இறுதிக்காட்சியில் அவர் எடுக்கும் முடிவும் சொல்லும் கருத்தும் சீரியஸாக சிந்திக்க வைக்கிறது.

நாயகி கயாடு லோஹர் கடனை அடைக்க கவர்ச்சி நடிகையாக மாறும் காட்சிகள் சதமடிக்கும் சம்மரில் குளிரடிக்கும் வின்டர். பளிங்கு மேனி பரவசக் கேணி. ரசிகர்களை கோவில் கட்ட வைக்கும் திறமை நிறையவே இருக்கிறது.

ஷம்மக்கா வாக வாழ்ந்திருக்கிறார் சோனாலி குல்கர்னி. தென்னிந்திய சினிமாவில் அடுத்த ரவுண்ட் வரப்போகும் அம்மா இவர் தான்.

டெரர் வழக்கறிஞராக வந்து டெரரிஸ்ட் சட்டத்தில் அப்பாவி மக்களுக்கு ஆப்பு வைக்கிறார் சத்யராஜ்.

ஒரு குத்துப் பாடலுக்கு செமத்தியாக ஆடி அசத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

படம் முழுவதும் அனிருத் ரவிச்சந்தரின் அதிரடி இசை மாஸ்; படத்தின் பாஸ் நான் தான் என்கிறது. சில இடங்களில் ரஜினி படத்திற்கு போட்ட பிஜிஎம் ஞாபகத்திற்கு வருகிறது.

ஒளிப்பதிவாளர் சி ஹெச் சாய் பிரம்மாண்டங்களை பிரமாதமாக பதிவு செய்திருக்கிறார். வாழ்வியலையும் வலிகளையும் மட்டுமல்லாமல் வாள்களால் வடியும் ரத்தங்களையும் கண்ணீரையும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் சிதறாமல் படமாக்கி இருக்கிறது சாயின் கேமரா. கலை இயக்கம் களத்தை நிஜமாக்குகிறது. எகிறி அடிக்கிறது எடிட்டிங்.

படம் முழுவதும் ஒரு டார்க் பீல். சண்டைக் காட்சிகளில் உண்மையிலேயே அனல் பறக்கிறது ரத்தம் தெறிக்கிறது. ஒரு மனிதனை எப்படி எல்லாம் வெட்டி வீசமுடியும் என்பதை இதற்கு மேல் எடுக்கவே முடியாது. அந்த அளவுக்கு தலை கை கால்கள் துண்டு துண்டாக பறக்கிறது. யாருடையது இந்த கொலைவெறி?

சுதந்திரத்திற்கு பின்னும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாத ஓர் இனக்குழுவின் வலிமிகுந்த வரலாற்றை ரத்த சரித்திரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. இதே போல இன்னொரு படம் நாயகன் நானிக்கு அமையுமா என்று தெரியாது. இது நானியின் “கேஜிஎப்”.

மிரட்டலான மேக்கிங், தாய்ப்பாசம், நாய் பாசம், பிறந்த குழந்தை, பின்னணியில் தெய்வ நம்பிக்கை என்று வலிமையாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர், அவசியமற்ற சில சண்டை காட்சிகளை தவிர்த்திருக்கலாம். நாயகனின் சிந்தனை சிதறுவது,

நீண்ட நேரம் வில்லன் இல்லாமல் இருப்பது, நாயகியின் ஒட்டாத கதை, லாஜிக் மிஸ்டேக் போன்ற குறைகள் இருந்தாலும், அழுக்கும் அசுத்தமும் பின்னணியாகக் கொண்ட ஒரு கதைக்கு, பாரடைஸ் (சொர்க்கம்) என்று பெயர் வைத்திருக்கும் இயக்குநரின் பார்வையை பாராட்ட வேண்டும். நாயகனும் நாயகியும் சிகரெட் பற்ற வைத்து கொண்டு காதலை சொல்லும் இடம் ரகளையான ரசனை.

பாரடைஸ்… ஆக்ஷன் ப்ரியர்களுக்கு திகட்டாத விருந்து.

 

தண்டோரா டுடே ரேட்டிங்: 3.5 /5

 

-ஆதிராஜன்

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *