பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்: முதலமைச்சருக்கு ராகம் சௌந்தரபாண்டியன் நன்றி!

இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்திரபாண்டியன் அவர்களின் அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-15 அன்று உலகம் போற்றும் உத்தம தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் “கல்வி வளர்ச்சி நாளாக” கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டு தமிழக பள்ளிகளில் பெருந்தலைவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மாணவ மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவை முறைப்படி நடத்தப்படாமல் இருந்து வருவது கண்டு எங்களது இந்திய நாடார்கள் பேரமைப்பு மிக கவலையை தெரிவித்து இருந்தோம்.
இந்த ஆண்டு தமிழக முதல்வர் மாண்புமிகு.திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து 04.07.2023 அன்று பள்ளி கல்வித்துறை முதன்மை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருப்பது கண்டு நாங்கள் மகிழ்ச்சியுற்றோம். அறிக்கை எண் :34752/எம்/இ 2/2023 நாள்:06.07.2023 -இன் படி இந்த ஆண்டு அணைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்திட வேண்டும் எனவும் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி. கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்திடவும், பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும், இவ்விழாவினை பள்ளியின் வளர்ச்சி நிதி அல்லது ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பெறப்படும் மானியத்தைப் பயன்படுத்தி சிறப்பாக நடத்திடவும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நல்ல முயற்சியை முன்னெடுத்த தமிழக அரசிற்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தனது மேலாண நன்றிகளையும் வாழ்த்துதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
அதுமட்டுமில்லாது, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழை போற்றுமளவிற்கு தமிழக முதல்வர் அவர்கள் அவ்வப்போது தனது பேச்சின் போது பெருந்தலைவரை நினைவுபடுத்துவது மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இருந்தபோதிலும், பெருந்தலைவரின் வாழ்வில் நடைபெறாத சில சம்பவங்களை அவரை இழிவுபடுத்தும் விதமாக பேசிவரும் நபர் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்திடவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். கல்வி வளர்ச்சிக்காக பல பள்ளிகளையும், கல்வி திட்டங்களையும், நமது தேசத்தின் நலனிற்காகவும், தமிழ் மக்களின் மேம்பாட்டிற்க்காக பல தொழிற்கூடங்களை தந்த மாபெரும் தலைவரின் புகழ் மங்கா வண்ணம் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமை ஆகும். அதனடிப்படையில் தமிழக முதல்வர் செயல்பட அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.