நடிகர் விஜய்யுடன் திடீர் சந்திப்பு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க துணை தலைவராகிறார்!! எம்.எல்.ஏ பதவி ராஜினாமா!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி சேருமா இல்லையா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரியும் பாஜக தலைவருமான அமித் ஷா வை சந்தித்தார். அதிலிருந்து அதிமுகவுக்கு பொறுப்பு ஏற்கப் போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ச்சியாக அவர் நடவடிக்கைகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கோபத்திற்கு உள்ளாக்கியது. இருந்து அமைதி காத்து வந்தார். பின்னர் “கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களையும் பிரிந்து சென்றவர்களையும் ஒன்று சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும்… இல்லாவிட்டால் நானே அந்த வேலையை செய்வேன்” என்று எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார் செங்கோட்டையன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து சமீபத்தில் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் சேரப்போவதாக நேற்று முதல் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முழுவதும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு வந்து சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.
இதன்பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்த செங்கோட்டையனை திமுக அமைச்சர் சேகர்பாபு சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரை திமுகவில் சேர அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையனிடம், நீங்கள் சேரப் போகும் கட்சி, திமுகவா, தவெகவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் கையெடுத்து கும்பிட்டபடி பதிலளிக்காமல் வேகமாக சென்று விட்டார்.
பின்னர் பட்டினபாக்கத்தில் உள்ள நடிகர் விஜய் இல்லத்துக்கு நேரில் சென்ற செங்கோட்டையன், அவரை நேரில் சந்தித்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதனால் தவெகவில் செங்கோட்டையன் இணைவது உறுதியாகி விட்டது. அவருக்கு தவெகவில் துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அஇஅதிமுக வைத் தொடங்கிய போது உடன் இருந்தவரும் தொடர்ந்து ஜெயலலிதா ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மந்திரிசபையில் அமைச்சராக பணியாற்றியவருமான செங்கோட்டையன் இன்று விஜய்யுடன் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து பல கட்சிகளில் ஓரம் கட்டப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளும் விஜய் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் விஜய் அதை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
![]()

