108 தொகுதிகளில் ஓங்கி ஒலித்த விசில் சத்தம்:  விஜய் வரலாற்று வெற்றி! ஆட்சி அமைக்க ஆதரவு தரப்போவது யார்? திருச்சி கிழக்கில் திரிஷா போட்டி?

108 தொகுதிகளில் ஓங்கி ஒலித்த விசில் சத்தம்:  விஜய் வரலாற்று வெற்றி!  ஆட்சி அமைக்க ஆதரவு தரப்போவது யார்? திருச்சி கிழக்கில் திரிஷா போட்டி?

 

தமிழக அரசியல் வரலாற்றில் நடிகர் விஜய் மாபெரும் சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்களை வேட்பாளராக நிற்க வைத்து 108 தொகுதி கமில் ஜெயிக்க வைத்திருக்கிறார். மாற்றம் தேவை என்று காத்திருந்த வாக்காளர்கள் தமிழகம் எங்கும் விசில் சத்தத்தை ஓங்கி ஒலிக்க வைத்திருக்கின்றனர். மக்களின் கடும் கோபத்தால் ஆட்சியை இழந்த திமுக, முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் போட்டியிட்ட குளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்திருப்பது அரசியல் அரங்கத்தை அதிர வைத்திருக்கிறது. திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி 53 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பழனிச்சாமி மாநிலத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். இது இன்று நள்ளிரவு 12 மணி நிலவரம்.

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆளும் தி.மு.க. கட்சி தோல்வியை தழுவிய நிலையில், த.வெ.க. அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.க.விற்கு கிடைக்கவில்லை.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தனிக் கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க. வென்றுள்ளது. இந்த இடங்களை வைத்து தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.

அதிலும் த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கிறார். அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 107 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும். அதிலும் ஒரு சீட் குறைந்து 106-ஆக குறையும்.

எனவே த.வெ.க. கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 12 இடங்கள் வேண்டும். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 5 இடங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வீதம் 4 இடங்களும், தே.மு.தி.க.விற்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு 5 இடங்கள், பா.ஜனதா கட்சிக்கு 1 இடம், அம.மு.க.விற்கு 1 இடம் கிடைத்துள்ளன. இரண்டு கூட்டணியிலும் உள்ள தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.விற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும். அதன்படி கணக்கிடும்போது 106+21 என்றளவில் 127 இடங்களை பெற முடியும்.

ம.தி.மு.க.விற்கு 2 இடங்கள் கிடைத்திருந்தாலும், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருப்பதால், அவர்கள் த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியாது.

இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நாளை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வரவுள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு 2 வழிகளில் ஒன்றை கவர்னர் தேர்வு செய்வார். அதன்படி, அதிக இடங்களில் வென்றுள்ள கட்சியான ( SINGLE LARGEST PARTY ) த.வெ.க. தலைவரை அழைத்து, பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பை வழங்குவார். இதற்கு ஒரு வாரம் வரை அவகாசம் தரப்படலாம்.

இல்லாவிட்டால், மற்றொரு வாய்ப்பாக, த.வெ.க. தனக்கு ஆதரவு தரும் கட்சிகளின் கடிதங்களை அந்தந்த கட்சிகளிடம் இருந்து பெற்று, கவர்னரிடம் வழங்க வேண்டும். அதில் 118 இடங்களுக்கு மேல் உறுதி செய்யப்பட்டிருந்தால், ஆட்சி அமைக்கும் உரிமையை த.வெ.க.வுக்கு கவர்னர் வழங்குவார். ஒருவேளை

எந்தக் கட்சிகளின் ஆதரவும் கிடைக்காமல் போனால், த.வெ.க.விற்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காது. எனவே ஆட்சியை அக்கட்சி அமைக்க முடியாமல் போகும். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், 2-வதாக அதிக இடங்களை வென்றுள்ள கட்சியான தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பளிப்பார். அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் சட்டசபை முடக்கப்படும். 6 மாதங்கள் கவர்னர் ஆட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதன் பின் மீண்டும் சட்டமன்ற தேர்தல் முழுமையாக நடைபெறும். ஆனால் அத்தகைய சூழல் உருவாகும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஜய்யுடன் கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல விஜய் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த தொகுதியில் நடிகை திரிஷாவை போட்டியிட செய்து அமைச்சரவையில் சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்ணாமலை ரஜினிகாந்த் கமல்ஹாசன் பவன் கல்யாண் விக்ரம் சிரஞ்சீவி ஜிவி பிரகாஷ் உதயா சார் முருகதாஸ் உள்ளிட்ட திரையுலகினர் தொடர்ந்து விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *