விஜய்யின் “ஜனநாயகன்” படத்திற்கு மறுதணிக்கை! 9 ம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல்!! ஐகோர்ட்டில் நாளை(ய) தீர்ப்பு!!!

விஜய்யின் “ஜனநாயகன்” படத்திற்கு மறுதணிக்கை! 9 ம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல்!! ஐகோர்ட்டில் நாளை(ய) தீர்ப்பு!!!

 

நடிகர் விஜயின் கடைசி படம் என்ற அறிவிப்புடன் பரபரப்பாக உருவான ஜனநாயகன் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த பிறகு பல அரசியல் கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதனால் படத்திலும் அதுபோன்ற காட்சிகள் இருக்கும் என்பதால் மக்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சென்சார் அதிகாரிகளுக்கு படம் போட்டு காட்டப்பட்டது. அப்போது சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கினால் “யுஏ 16+” என்ற சான்றிதழ் வழங்கப்படும் என்று சென்சார் அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து சென்சார் குறிப்பிட்ட மாற்றங்களை செய்து டிசம்பர் 19ஆம் தேதி சமர்ப்பித்து விட்டனர். ஆனாலும் சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படவில்லை.

இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான கேவிஎன் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்தது. நேற்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்சார் போர்டு சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் “இந்த படத்தில் மத உணர்வுகளை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதாக புகார் வந்துள்ளது” என்று தெரிவித்தார். உடனே நீதிபதி அந்த புகார் மனுவை கோர்ட்டில் சமர்ப்பியுங்கள் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இன்று பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் ராணுவத்தின் சில குறிப்பிட்ட சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து பாதுகாப்புப் படை வல்லுநர்களிடம் முன்பே ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும்
ஏற்கனவே படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம் பெறாத புதிய உறுப்பினர்களைக் கொண்டு, இத்திரைப்படம் மீண்டும் மறுசீராய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உடனே நீதிபதி “ஏற்கனவே படத்தை பார்த்துவிட்டு குறிப்பிட்ட காட்சிகளை வசனங்களை நீக்கினால் யுஏ சான்றிதழ் வழங்க தயாரென்று தெரிவித்த பிறகு மீண்டும் தணிக்கை செய்யும் முடிவை எப்படி எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

“தணிக்கை வாரியத்தின் (CBFC) தலைவருக்கு, ஒரு படத்தை ஆய்வுக்குழு பார்த்த பிறகும் கூட, மீண்டும் மறுஆய்வு செய்ய உத்தரவிட அதிகாரம் உள்ளது” என்று விளக்கமளித்தார்.

தயாரிப்பாளர் தரப்பில் ,” இந்த படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகாவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்” என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு
வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பு  நாளை (8 ம் தேதி) வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *