பராசக்தி (விமர்சனம்)
1960 களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இந்திய வரலாற்றின் சில பக்கங்களில் கருப்பு மையால் எழுதப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மாணவர்கள் மத்தியில் பெரும் புரட்சித் தீயை உண்டாக்கிய போராட்டங்கள் மத்திய அரசாங்கத்தையே நடுங்கச் செய்தது என்பது வரலாறு. குறிப்பாக 1965ல் ஜனவரி 26க்கு பிறகு இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக அலுவல் மொழியாக தொடரும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இளைஞர்களை கொந்தளிக்கச் செய்தது. பலகட்ட போராட்டங்கள் மற்றும் உயிர் தியாகங்களுக்கு பிறகு, ஆங்கிலமும் அலுவல் மொழியாக தொடரும் என்ற முடிவை மத்திய அரசு அறிவித்தது. இந்த உண்மை சம்பவங்களை பின்னணியாக கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து இயக்குனர் சுதா கொங்கரா வலிமையான வார்த்தைகளில் கதை திரைக்கதை வசனங்களை அமைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
1959இல் மாணவனாக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்புக்காக மாணவர்களை திரட்டி புறநானூற்றுப்படை என்ற என்ற அமைப்பை ரகசியமாக செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரெயிலுக்கு தீ வைக்கிறார். எதிர்பாராத விதமாக விபத்தில் சக மாணவனும் இறந்து போகிறார். இந்த சம்பவங்களை தடுக்க அனுப்பப்படும் மத்திய அரசின் காவல்துறை அதிகாரியான ரவி மோகன் (ஜெயம் ரவி) கடமை தவறியதற்காக தண்டனை பெறுகிறார். பின்னர் நாயகன் படிப்பை முடித்து ரயில் இன்ஜினில் வேலை பார்க்கிறார். ஆனால் அவருடைய தம்பி அதர்வா முரளி இன்ஜினியரிங் படித்துக் கொண்டே தீவிரமாக அண்ணனை விட தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுக்கிறார். கதாநாயகி ஸ்ரீலீலாவுக்கு தமிழில் முதல் படம். தெலுங்கு பெண்ணாக வருகிறார். போராட்டங்களை அடக்க நினைக்கும் முதல்வர், அவர்களின் உயிரை எடுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரி, இவர்களை மீறி தங்களது லட்சியத்தை சாதிக்கும் மாணவர்கள் என விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதா.
தம்பி மீது பாசம் காட்டும் காட்சி, கண் முன்னே ஒருவன் தீக்குளிப்பதை பார்த்து கதறும் காட்சி, போலீஸ் விசாரணையின் போது செந்தமிழைக் காக்க பெருஞ்சேனை ஒன்று வரும் என்று உறுமும் காட்சி இன்று பல இடங்களில் தன் அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். காதல், சண்டைக் காட்சிகளிலும் செம மாஸ்.
ரவி மோகன் துணிச்சலாக இந்த கொடூரமான போலீஸ் அதிகாரி வேடத்தை ஏற்றிருக்கிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய அதிகாரி ஜெனரல் டயரை ஞாபகப்படுத்துகிறார்.
அதர்வா முரளிக்கு அசத்தலான உடல்மொழியில் கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரம். அசத்தியிருக்கிறார்.
நாயகி ஸ்ரீலீலா வுக்கு துள்ளலான கேரக்டர். அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் இதயங்களை திருடுகிறார்.
ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் செவிகளுக்கு விருந்து. இரைச்சல் இல்லாமல் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படமாம்…. வாழ்த்துக்கள் ஜிவி.
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு ஒரு போராட்ட களத்தையே கண் முன் நிறுத்துகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாகனங்கள் வீடுகள் உடைகள் மற்றும் பொருள்கள் என்று இயக்குனரின் மனதில் உள்ள காட்சிகளை, ஆர்ட் டைரக்டர் உடை வடிவமைப்பாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அழகாக மொழி பெயர்த்திருக்கிறது ரவி கேயின் கேமரா.நடன வடிவமைப்பு கூட காலகட்டத்திற்கு ஏற்ற நேர்த்தி.
சிவகார்த்திகேயனின் டிரேட் மார்க் காமெடி மிஸ்ஸிங். போராட்டம் வெளி மாநிலங்கள் வரை பரவுவது எப்படி? செழியனுடன் கனெக்ட் ஆகிறார்கள் என்பதற்கு சில காட்சிகள் வைத்து இருக்கலாம்.
கேரக்டர்களின் நேர்த்தியான வடிவமைப்பு அழுத்தமான வசனங்கள் மூலம் இன்றைய தலைமுறைக்கு நேற்றைய வரலாற்றை கொண்டு சேர்த்திருப்பதுடன் மொழிப் பற்றின் அவசியத்தையும் மொழியில்லையே சிந்தனை அழியும், சிந்தனையில்லையேல் அடிமைத்தனம் எளிதாக நடந்து விடும் என்பதையும் வீரியத்துடன் சொல்லி இருக்கும் இயக்குநர் சுதா கொங்குராவை பாராட்டியே தீர வேண்டும்.
பல காட்சிகளில் கத்திரி போட்டும் வசனங்களில் மியூட் செய்தும் அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெருவதை லாவகமாக தவிர்த்திருக்கிறது சென்சார் போர்டு.
RATING: ***
CENSORSHIP: U/A
-BY AADHIRAAJAN
![]()

