விமர்சனம்: “கொலை” RATING: ***

விமர்சனம்:  “கொலை”   RATING: ***

 

மாடல் அழகி லைலா ஒரு அப்பார்ட்மெண்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதில் தொடங்குகிறது கதை. யார் அந்த லைலா? எதற்காக கொலை கொல்லப்பட்டார்? யார் கொலையாளி? என்பதை பல கோணங்களில் விசாரித்து இறுதியில் குற்றவாளியை கண்டுபிடிப்பது தான் கிளைமாக்ஸ். இது போன்ற துப்பறியும் கதைகள் நிறைய வந்திருந்தாலும் ஸ்டைலிஷான மேக்கிங்கில் விழிகளுக்கு விருந்தாகிறது இந்த கொலை.

லைலா கொலையை விசாரிக்கும் அதிகாரியான ரித்திகா சிங் காவல்துறையிலிருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் அதிகாரி விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார். சோகமான சூழ்நிலையில் இருந்தாலும் உதவி செய்ய வரும் விஜய் ஆண்டனி பக்குவப்பட்ட நடிப்பில் பக்காவாக ஸ்கோர் செய்கிறார். அவருடைய தோற்றத்தில் தெரியும் மாற்றமும் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது. ரித்திகா சிங் போலீஸ் அதிகாரியாக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். லைலாவாக நடித்திருக்கும் மீனாட்சி சௌத்ரி மாடல் அழகியாகவே மனதில் பதிகிறார். லைலாவின் காதலன் கேரக்டர் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். முரளி ஷர்மாவின் வில்லத்தனம் அசத்தல். ராதிகா சரத்குமார் நடித்ததில் நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் எக்ஸிட் ஆகியிருக்குமோ என்று தோன்றுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி குமார் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு த்ரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் எடிட்டர் செல்வா இசையமைப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குனர் சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினியர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தை கிராபிக்ஸ் காட்சிகளாக காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப ஒளிப்பதிவு ஒலிக்கலவை, ஒரு காட்சியின் கடைசி பிரேமில் இருந்து அடுத்த கட்சியின் முதல் பிரேம் தொடங்குவது போன்ற காட்சி அமைப்புகள் அருமை.
தொழில்நுட்ப ரீதியாக இந்த “கொலை” நேர்த்தியான கலை.

படத்தின் அத்தனை கேரக்டர்களும் மெதுவாக பேசுவதையும் காட்சிகள் மெதுவாக நகர்வதையும் தவிர்த்திருக்கலாம். லைலா நடந்த சம்பவங்களை எல்லாம் விசாரணை தொடங்கும் முன்பே விவரித்து விடுவது சுவாரஸ்யத்தை குறைத்தாலும் குற்றவாளி யார் என்பதை யூகிக்க முடியாமல் திரைக்கதை அமைத்து இருப்பதும் அடுத்தடுத்து புதுப்புது கேரக்டரை அறிமுகப்படுத்துவதும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. லைலா மேனேஜரை பிடிப்பதற்கான திட்டமிடலும் கைது செய்வதும் ஏதோ ஒரு தீவிரவாதியை சுற்றி வளைக்கும் அளவுக்கு பில்டப். இது கொஞ்சம் ஓவர் தான்.

கொலை… சிலந்தி வலை!

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *