திரை விமர்சனம்: ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர்.
மிக நேர்மையான துணிச்சலான ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று
தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த் ரவி மருமகள் மிர்னா மற்றும் பேரன் ரித்திக் உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார ரஜினிகாந்த். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரவியை அந்த கும்பல் கொலை செய்து விடுகிறது. நேர்மையாக வளர்த்ததால்தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி கலங்கும் ரஜினி அந்த ரவுடி கும்பலை வெறித்தனமாக பழி தீர்ப்பது தான் படத்தின் கதை.
ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினி பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் யோகி பாபுவுடன் காமெடி காட்சிகளிலும் கைதிகளிடம் பஞ்ச் டயலாக் பேசி பயமுறுத்தும் போதும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். 30 வயது ரஜினிகாந்த் இன்னும் அதிக நேரம் இருக்க மாட்டாரா என்று எதிர்பார்க்க வைக்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் ரஜினியின் பில்டப் காட்சிகள் செம ரகளை. “வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் குறையல…” என்ற நீலாம்பரியின் வசனம் நிதர்சனம் தான்.
மனைவியாக ரம்யா கிருஷ்ணன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் மிரட்டி இருக்கிறார். வித்தியாசமான வில்லனாக தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார்.
தமன்னா “காவாலா…” பாடல் கட்சியில் கட்டழகு மேனி காட்டி கெட்ட ஆட்டம் போட்டு இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைக்கிறார். அவருடைய காதல் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.
இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் சில காட்சிகளுக்கு பலம் சேர்க்கின்றனர்.
ரஜினி ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து கொண்டு காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
அதற்கு பின்னணி இசையால் பிரமாதப்படுத்தி இருக்கிறார்
அதிரடி இசையமைப்பாளர் அனிருத். படம் முழுக்க இசை மாயாஜாலம் செய்கிறது.
விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவும் எம் நிர்மலின் படத்தொகுப்பும் ஸ்டன்ட் சிவாவின் சண்டை காட்சிகளும் படத்திற்கு பலம்.
யோகி பாபு, கிங்ஸ்லீ, சுனில் என்று பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் சில காட்சிகள் மட்டுமே சிரிக்க வைக்கிறது.
மிகப்பெரிய இமேஜ் உள்ள ஒரு நடிகருக்கு காட்சிகள் அமைப்பதில் இயக்குனர் நெல்சன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றாலும் வழக்கமான கதை, அழுத்தமற்ற திரைக்கதை, பிற்பாதியில் வரும் லாஜிக் மீறல்கள் ஆகியவற்றை ரஜினி ரசிகர்களால் மட்டுமே எளிதில் கடந்து செல்ல முடியும். ஆனால் சமீபத்திய ரஜினி படங்களை ஒப்பிட்டால் இந்த “ஜெயிலர்” ஜெயிக்கிற குதிரை தான்.
RATING: ****