தெலுங்கிலும் தடம் பதிக்கிறார்: விஜய்யுடன் நடித்ததை தொடர்ந்து பவன் கல்யாணுடன் இணையும் ஷாம்!

தமிழ் சினிமாவில் “12 பி ” என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து லேசா லேசா, இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார்.
இந்த வருட துவக்கத்திலேயே விஜய்யின் சகோதரராக ஷாம் நடித்திருந்த “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.
இதைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷாம். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அடுத்தததாக தமிழில் இன்னும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் ஷாம். இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இன்னொரு பக்கம் தெலுங்கில் “சாஹோ” இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாம். ஏற்கனவே தெலுங்கில் ரவி தேஜா உடன் நடித்த “கிக்” உட்பட பல படங்கள் ஷாமுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தவிதமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார் ஷாம்.