திரை விமர்சனம்: லீடர் – U/A

திரை விமர்சனம்: லீடர் – U/A

 

தூத்துக்குடியில் ஒரு கார் மெக்கானிக் காக வேலை செய்யும் கதாநாயகன் சக்திவேல் (லெஜெண்ட் சரவணன்)
தனது மகளுக்கே நான் தான் அப்பா என சொல்ல முடியாத அளவுக்கு இக்கட்டான சூழ்நிலையில், மகளுடன் வாழ்ந்து வருகிறார். தூத்துக்குடி ஹார்பரையே அழிக்க திட்டமிட்டுள்ள டெவில் (சந்தோஷ் பிரதாப்) செயலை தடுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியா தனது புத்திசாலித்தனமான செயலால் மெக்கானிக் சக்திவேலை வைத்து ஹார்பருக்குள் இருக்கும் கண்டெய்னரையும் அதில் உள்ள வெடி பொருளையும் கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வருகிறார். போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கண்டெய்னரை மெக்கானிக் சக்திவேலை வைத்து வெளியே கொண்டுவர திட்டமிடுகிறார் வில்லன் சந்தோஷ் பிரதாப். இந்த திட்டம் நிறைவேறியதா? மெக்கானிக் சக்திவேல் தன் மனைவியை எதற்காக சுட்டார்? மெக்கானிக் சக்திவேல் உண்மையில் யார்? என்பதற்கெல்லாம் விடை சொல்வதே படத்தின் மீதிக்கதை.

லெஜெண்ட் சரவணன் மெக்கானிக் சக்திவேலாக நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். முதல் படத்தை விட நடிப்பிலும் சண்டை காட்சிகளிலும் பல மடங்கு முன்னேறியிருக்கிறார் சரவணன். சர்ச்சில் குழந்தையிடம் உண்மையை சொல்லும் காட்சியிலும் அனாதை இல்லத்தில் மகளுக்காக உருகும் காட்சியிலும் நெகிழ வைக்கிறார். சண்டை காட்சிகளிலும் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான ஆவேசத்தை காட்டியிருக்கிறார். கதாநாயகியாக வடநாட்டு அழகி பாயல் சிறப்பாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரியாவின் நடிப்பு சிறப்பு. போலீஸ் எஸ் பி யாக ஷாம் கொடுத்த கதாபாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார். வில்லனாக சந்தோஷ் பிரதாப் நடிப்பு மிரட்டல். பாகுபலி பிராபகரன் நடிப்பும் அசத்தல்.விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, ஐஸ்வர்யா, லால், அம்ரிதா ஐயர், ஜார்ஜ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிந்துள்ளனர். விடிவி சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். மகளாக வரும் குழந்தை நட்சத்திரம் இயல் அப்பாவித்தன நடிப்பால் அனுதாபத்தை அள்ளி கொள்கிறார். எதிர்கால நாயகி என்பது இப்போதே தெரிகிறது.

ஜிப்ரான் இசை படத்திற்கு பலம். மாஸ் ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். வெங்கடேஷின் ஒளிப்பதிவு அசத்தல். அந்த ரயில் சண்டை காட்சிகளில் கேமராக்களின் கோணமும் வேகமும் மிரட்டல். ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பும் எடிட்டரின் கட்டிங்கும் படத்தின் வேகத்தடைகளை உடைத்தெறிகிறது.

நிச்சயமாக விஷால் போன்ற ஆக்ஷன் ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையாகத்தான் இருக்கும். அதில் லெஜன்ட் சரவணனை சரியாகப் பொருத்தி சரவெடியாக தாக்கியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். திரைக்கதை திக்கெட்டும் விரிந்து திகைக்க வைக்கிறது. படத்தில் ட்விஸ்ட் வைக்கலாம்… இவர் ட்விஸ்ட்டுக்குள்ளேயே படத்தை வைத்திருக்கிறார். மொத்த கேரக்டர் களையும் ஒத்த புள்ளியில் இணைத்து விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் துரை. அதிரடி அடிதடி கதைகளுக்கு இன்னொரு நாயகனை உருவாக்கி இருக்கிறார். வில்லன் ஏரியாவில் கொஞ்சம் சீட்டிங் ப்ளே. நீளமான ஃப்ளாஷ் பேக் திணற வைக்கிறது, இரண்டு படத்திற்கான காட்சிகள் ஒரே படத்தில் வைக்கப் பட்டது போல. ஆனாலும் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு ரியல் ட்ரீட்.

லீடர்…ஸ்பீடர்.

RATING: ***

– AADHIRAAJAN

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *