கல்வி புரட்சிக்கு வித்திட்டது காமராஜரா? கலைஞரா?: வரலாற்றை திரிக்க முயற்சிப்பதா? முதல்வர் ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்! நாடார்கள் பேரமைப்பு தலைவர் சௌந்தரபாண்டியன் ஆவேசம்!!

இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்தரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை :
தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 15-07-2023 அன்று மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவில் பேசும்போது “கல்வி புரட்சிக்கு வித்திட்டது தி.மு.க என்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாதி அவர்கள் தான் இலவச கல்வி கொண்டுவந்தது போலவும், அதன் பின் தான் தமிழகத்தில் கல்வி கற்பவர் எண்ணிக்கை அதிகரித்தது” என்றும் பேசியிருப்பது வரலாற்றினை மாற்ற நினைக்கும் செயலாகத்தெரிகிறது. கர்மவீரர் காமராஜர் அவர்கள் தான் தமிழகத்தில் முதன்முதலாக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் அதனாலேயே, கல்வி கண் திறந்த வள்ளல் என போற்றப்படுபவர். ஆனால் தாங்கள் பேசி இருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமானது.
இந்தியாவில் காணப்பட்ட குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான குருகுல கல்வி முறைக்கு எதிராக கல்விப் புரட்சியை மேற்கொண்டவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஆவார். ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடப்பட்ட ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆரம்பப்பள்ளிகளை திறந்தார். அத்துடன் அந்த காலகட்டத்திலேயே ஆறுகோடி ரூபாயை புதிய பள்ளிகள் கட்டுவதற்கும் மற்றும் அப்பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்காகவும் ஒதுக்கினார்.
அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல தொடக்க பாடசாலைகளை ஆரம்பித்தார். அது மட்டுமல்லாது மேலும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துகின்ற நோக்கில் கல்வி உயர்நிலைக் குழுவை அமைத்தார்.
மேலும் 1962ல் இலவச கல்வி முறைமை போன்ற பல்வேறு திட்டங்களை கல்வித் துறைகளில் மேற்கொண்டு கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி புரிந்தார். இவைகளெல்லாம் நடந்த வரலாறு ஆகவே, தமிழக்தில் கல்வி புரட்சி கொண்டுவந்தது காமராஜர் தான் என்பது இந்த உலகிற்கே அறிந்த ஒன்று. ஒருவன் தான் அடைய நினைக்கும் இலக்கிற்கு முதல் படியில் ஏறினால்தான் எண்ணிய இலக்கை அடையமுடியும் என்கிற நோக்கில் ஆரம்ப பாட சாலைகளை கிராமங்கள் தோறும் உருவாக்கியவர் கர்மவீரர் காமராஜர்தான் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. இதை தமிழக முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களும் பாராட்டியது மட்டுமல்ல பெருந்தலைவரின் பிறந்த நாளை கடந்த 2006 ஆம் ஆண்டு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்கள். தமிழக பள்ளி மாணவ, மாணவர்களுக்கு அன்றைய தினத்தில் பள்ளிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள், பட்டிமன்றங்கள், கதை, கவிதை போட்டிகள் நடத்தவேண்டும் பெருந்தலைவர் புகழை அவரது பிறந்த நாளை மாணவர்களுக்கு நினைவூட்டும் வண்ணம் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக முதல்வராக இன்று இருக்கக்கூடிய, தாங்கள் கூட அதனை நினைவுபடுத்தி இந்த ஆண்டு (2023) பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தீர்கள். அதனை எங்களது இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் வரவேற்று உங்களை பாராட்டியிருந்தோம்.
ஆனால், இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, அல்லது மறந்துவிட்டு நீங்கள் பேசிய பொழுது, தமிழகத்தின் கல்வி புரட்சிக்கு காரணம் திமுக என்றும், கலைஞர் கருணாநிதி என்றும் பேசியதோடு மட்டுமல்லாமல், அவரின் இந்த செயலுக்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களே பாராட்டினார்கள் என பேசியிருப்பது எந்தவகையில் நியாயமானதாக இருக்கும்.
ஒரு மாநிலத்தின் முதல்வரே இவ்வாறு வரலாற்றை திரித்து பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு படித்துக்கொண்டிருக்கிற மாணவர்களுக்கு வரலாற்றை சொல்லித்தருகின்றேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் இவ்வாறு தவறாக பேசி இருக்கக்கூடாது. நீங்கள் சார்ந்திருக்க கூடிய இயக்கத்தினை உங்கள் அரசின் செயல்பாடுகள் உயர்த்தி பேசுவது என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்று. ஆனால், நடக்காத ஒன்றை நடந்தது போன்று பேசி வரலாற்றை மாற்றி பதிய வைப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உண்மையைத்தான் வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர, உங்களை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அடுத்தவரை தாழ்த்தி பேசியோ, பொய்யை பேசியோ வரலாற்றை மறைக்கக்கூடாது.
எங்களது இந்திய நாடார்கள் பேரமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும், எங்களது சமுதாயத்தின் அனைத்து மக்களும் இன்றைக்கு இந்த பேச்சை கேட்டுவிட்டு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள். உண்மைகளை தான் உலகிற்கு சொல்வது ஒரு தலைவனுக்கு அழகு. அந்த வகையில் பார்த்தாலும் தாங்கள் தலைமை வகிக்கும் திமுக மீதும் எங்களது நாடார் சமுதாய மக்கள் இந்த நிகழ்வுக்காக மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள். எனவே, தமிழக முதல்வராகவோ, அல்லது திமுக தலைவராகவோ, தாங்கள் பேசிய இந்த பேச்சினை திரும்ப பெறவேண்டும். அதுவே, முறையாக இருக்கும் என்பதால் இந்த விஷயத்தில் உடனடி உங்களது பதிலை எதிர்பார்க்கிறோம். எங்கள் சமுதாயம் என்றைக்கும் நல்ல விஷயங்களை வரவேற்பதிலும், தவறானவற்றினை சுட்டி காட்டுவதிலும் முதலானவர்களாக இருப்போம். அதே நேரத்தில், திருத்தப்படாத தவறுகளை தட்டி கேட்பதில் போர்க்குணம் கொண்டவர்களாக இருப்போம் என்பதுதான் கடந்த கால வரலாறு என்பதனையும் தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது