“ஜூலை 18” தமிழ்நாடு நாளாக ஏன் கொண்டாடப்படுகிறது? பெயர் சூட்டுவதற்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார்!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதியை தங்களின் மாநில நாளாக கொண்டாடி வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை, நமது மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரிட்டு அறிவித்த நாளான ஜூலை 18 -ஐ தமிழ்நாடு நாள் என்று கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த வகையில் ஜூலை 18-ம் தேதி தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?
1947-ம் ஆண்டு இந்தியா விடுதலையான பிறகு, மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
அப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தின் சில பகுதிகள் ஹைதராபாத், திருவிதாங்கூர், மைசூர் மாகாணங்களின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டன. ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் புதிதாக உருவாகின. எஞ்சிய பகுதிகளை கொண்டு நமது சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது.
1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1967 ஜூலை 18-ம் தேதி முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை சட்டப்பேரவையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானத்தை தாக்கல் செய்தார். அனைத்து கட்சி ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேறியது.
எனவே நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ம் தேதியே தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு என பெயர் ஏன்?
சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு என்ற பெயரை சூட்டக் கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார் 1957-ம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.
உண்ணாவிரதம் தொடங்கிய 76-வது நாள் அவர் உயிரிழந்தார். அதன்பின்னர் தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. 1962-ம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்ய மசோதா கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
1964-ல் சென்னை மாகாண சட்டசபையில் திமுகவின் எம்.எல்.ஏ தமிழ்நாடு என்ற பெயர் மாற்றக்கோரி திமுக எம்.எல்.ஏ தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஜூலை 18-ம் தேதி சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றி அமைக்கப்பட்டது.
எனவே ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
நன்றி:
இராசமு ஹமீது
பீப்பிள் மீடியா ரிசர்ச் டிரஸ்டு 9941086586