நடிகர் – டைரக்டர் மாரிமுத்து திடீர் மரணம்: டப்பிங் பேசும்போது மாரடைப்பு! நடிகர் நடிகைகள் கண்ணீர் அஞ்சலி!! சரத்குமார், வைரமுத்து இரங்கல்!!!

நடிகர் – டைரக்டர் மாரிமுத்து திடீர் மரணம்: டப்பிங் பேசும்போது மாரடைப்பு! நடிகர் நடிகைகள் கண்ணீர் அஞ்சலி!! சரத்குமார், வைரமுத்து இரங்கல்!!!

 

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள டப்பிங் தியேட்டரில் “எதிர்நீச்சல்” சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதிகம் வியர்ப்பதாக சொல்லிவிட்டு வெளியே வந்தார். சிறிது நேரம் அங்கே காத்திருந்தவர் தனக்கு ஏதோ செய்வதை உணர்ந்தவராக தானே காரை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு சென்றார். போகும்போதே மனைவிக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வரும்படி சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட
அவரை தூக்கிச் சென்று மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகும் பலனின்றி உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு சின்னத்திரை நடிகை நடிகர்களும் திரைப்பட நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படப்பிடிப்பின் போது மாரிமுத்துவுடன் எடுத்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு உடன் நடித்தவர்கள் உருக்கமாக அஞ்சலி செய்தி வெளியிட்டு வருவது பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.

இன்று மாலை அவருடைய உடல் சொந்த ஊரான வருசநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம் வருச நாட்டில் பிறந்த மாரிமுத்து திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு சென்னை வந்தார்.
இயக்குனர்கள் மனிரத்னம், வசந்த், ராஜ்கிரண், S.J.சூர்யா ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவிடம் சில ஆண்டுகள் உதவியாளராக வேலை பார்த்தார்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு “கண்ணும் கண்ணும்” என்ற திரைப்படத்தையும், 2014 ஆம் ஆண்டு “புலிவால்” என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து வந்தார். ஆயுதம் செய், பரியேறும் பெருமாள், புலிக்குட்டி பாண்டி, சைரன், அருவா சண்டை, விக்ரம் , ஜெயிலர், இந்தியன் 2 உட்பட 43 படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நெடுந்தொடரில் இவரை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது.
ஆதி.குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து இந்த எதிர்நீச்சல் தொடரின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜோதிடர்களுடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.

இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவருக்கு வயது 57.

மாரிமுத்து மறைவுக்கு நடிகர் சரத்குமார் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கின்றனர்.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *