5 மணி நேரம் ஓடும் முதல் படம்: “இரட்டை பாகுபலி” அக்டோபர் 31ல் ரிலீஸ்! இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி புதிய முயற்சி!!

கடந்த புத்தாண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் தயாராகி தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்த வரலாற்று படைப்பான ” பாகுபலி” ( THE BEGINNING) புலிப்பாய்ச்சலில் வசூல் வேட்டை நடத்தி இந்திய திரையுலகையே ஆச்சரியப்பட வைத்தது. அத்துடன் உலக நாடுகளிலும் வெளிநாட்டு படங்களுக்கு இணையாக வசூல் சாதனை நிகழ்த்தியது. சுருக்கமாக சொன்னால் ஹாலிவுட் திரையுலகே இந்திய திரையுலகை திரும்பி பார்க்கும் சூழலை உருவாக்கியது. இத்தனை நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சிகள் இதற்கு முன்பு இந்திய சினிமாவில் இடம் பெற்றதில்லை என்பதும் அதற்கு முக்கிய காரணம். 2015 இல் வெளியான பாகுபலி முதல் பாகம் சுமார் ரூபாய் 650 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து பலத்த எதிர்பார்ப்புடன் 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாகுபலி இரண்டாம் பாகம் ( THE CONCLUSION) உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 1742 கோடி வசூல் செய்து சரித்திர சாதனை படைத்தது.
இந்திய சினிமாவின் மகுடமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது பாகுபலி.
இத்தகைய பெருமைக்குரிய படத்தை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமௌலி. இதில் பிரபாஸ் ராணா டகுபதி அனுஷ்கா தமன்னா ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நாசர் ரோகினி சுதீப் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மரகதமணி இசையமைத்திருந்தார். பாடல்களிலும் சரித்திர கால பின்னணி இசையிலும் மிரட்டி இருந்தார் மரகதமணி. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு எரகலடா பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார். இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை நட்சத்திரங்களின் சம்பளமும் பல கோடி ரூபாய் உயர்ந்ததற்கு காரணம் பாகுபலியின் அபரிமிதமான வெற்றி தான். அதுவும் ஹீரோ பிரபாஸ்க்கு “பான் இண்டியா ஹீரோ” இன்று இமேஜை உருவாக்கி100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்க வைத்தது.
பாகுபலி மூன்றாம் பாகமும் தயாராகப் போகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் முதல் இரண்டு பாகங்களை இணைத்து “பாகுபலி- தி எபிக்” என்ற பெயரில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. பாகுபலி முதல் பாகம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள். இரண்டாம் பாகம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் மொத்தம் ஐந்து மணி நேரம் 25 நிமிடங்கள் வருகிறது. மிகவும் கஷ்டப்பட்டு எடிட்டிங் செய்தால் கூட ஒரு 5 மணி நேர படமாக உருவாகும். இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் இரண்டு பாகங்களை ஒன்றாக இணைத்து எந்த படமும் வந்தது இல்லை. ஏனென்றால் அவ்வளவு நேரம் ரசிகர்கள் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்க மாட்டார்கள் என்பது தான்.
ஆனால் தற்போது ஓடிடியில் வெப் சீரிஸ் என்ற பெயரில் பல மணி நேரம் படம் பார்க்கும் கெட்ட பழக்கம் இளைய தலைமுறையினரிடம் பெருகிவிட்டது. அதனால் திரையரங்குகளில் 5 மணி நேரம் படம் பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிட முடியும். பல புதிய உச்சங்களை தொட்ட பாகுபலி ரிலீஸிலும் புதுமைகள் பல படைக்கட்டும்.
-ஆதிராஜன்