750 படங்களில் நடித்தவர்: பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்!!

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.
தெலுங்கு நடிகரான அவருக்கு தமிழில் இது தான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், குத்து,ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி 2 என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர். இந்தி மலையாளம் கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.
1978 ல் “பிரணம் பரீஹட்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர்ந நடிகர் பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

1999 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச எம்எல்ஏ வாகவும் பதவி வகித்துள்ள இவர் நந்தி விருது பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவருடைய மகன் கோட்டா வேங்கட ஆஞ்சநேய பிரசாத் கடந்த 2010 ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். அதனால் மனம் உடைந்து போன கோட்டா 2013 ம் ஆண்டு முதலே நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கோட்டா சீனிவாச ராவ் இன்று காலை 6.30 மணி அளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83. அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.