“கூலி” படம் பார்த்து ரஜினி பாராட்டு: ஆகஸ்ட் 2ல் ட்ரெய்லர் ரிலீஸ்! ஆயிரம் கோடியை அள்ளுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் 171 வது படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் கன்னடத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக இருக்கும் உபேந்திரா ஹிந்தியில் அமீர்கான் தெலுங்கில் நாகார்ஜுனா என முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது தான். தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். சத்யராஜ் சுருதிஹாசன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பு இத்தனை டாப்ஸ்டார்கள் எந்த படத்திலும் மொத்தமாக கூட்டு சேர்ந்ததில்லை. இது ரஜினிகாந்த் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையை காட்டுவதாக இருந்தாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “கமர்சியலான சாமர்த்திய தனம்” என்பது தான் உண்மை.
ரஜினி போன்ற சீனியர் ஹீரோக்களின் பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு இதுபோன்ற தாங்கு சக்தி தேவைப்படுவது காலத்தின் கட்டாயம் கூட.
74 வயதில் ஒரு சூப்பர் ஸ்டாரை மிகவும் கஷ்டப்படுத்தாமல் நடிக்க வைத்து, தொழில் நுட்ப கருவிகளின் துணையோடு ஒரு அதிரடி ஆக்சன் படம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு பகுதிக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அன்பறிவ் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்திருக்கிறார்.
சமீபத்தில் கூலி படத்திற்கு டிரைலர் வெளியிடப்படாது என்று தகவல் பரவியது எதிர்மறையான கருத்துக்களை பிரதிபலித்தது. இது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து இப்போது ஆகஸ்ட் 2ஆம் தேதி டிரைலர் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் 95 சதம் முடிவடைந்த படத்தை ரஜினிகாந்த்துக்கு போட்டு காண்பித்திருக்கிறார் லோகேஷ். படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரஜினி மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். ” தளபதி படத்தை பார்த்தது போல இருக்கு” என்று சொல்லி இருக்கிறார். ஆக கூலி இன்னொரு தளபதியாக ரசிகர்களை குஷிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுமார் 20 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
இந்நிலையில் கூலி படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் பற்றி பலவிதமான பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு உரிமை மட்டுமே ரூ.80 கோடிக்கும், சாட்டிலைட் ஓடிடி ஆடியோ உள்ளிட்ட டிஜிட்டல் உரிமைகள் சுமார் ரூபாய் 200 கோடிக்கும் விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் பட்ஜெட் ரூபாய் 375 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
இதுவரை இந்தியில் அமீர்கான் நடித்த டாங்கல், ஷாருக்கான் நடித்த பதான் மற்றும் ஜவான், தெலுங்கில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 மற்றும் கல்கி ஏடி, ராம் சரண் ஜூனியர் என்டிஆர் நடித்த “ஆர் ஆர் ஆர்,” அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 கன்னடத்தில் யஷ் நடித்த கேஜிஎப் 2 ஆகிய 8 படங்கள் மட்டுமே இதுவரை 1000 கோடி வசூலை கடந்த படங்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன. நாட்டின் முக்கிய திரைப்பட மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து எந்தப் படமும் அந்த பெருமையை எட்டிப் பிடிக்க வில்லை. பல மொழி நடிகர்களின் பலமான கூட்டணியுடன் உருவாகியிருக்கும் ரஜினியின் கூலி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று தமிழ் திரையுலகம் ஏக்கத்துடன் காத்திருக்கிறது.