ஈடு இணையற்ற தலைவர் காமராசர் பற்றி அவதூறாக பேசுவதா? : திமுகவில் இருந்து திருச்சி சிவாவை நீக்க வேண்டும்! இந்திய நாடார் பேரவை தலைவர் சௌந்தரபாண்டியன் ஆவேச அறிக்கை!!

உலகம் போற்றும் உத்தம தலைவர் காமராஜர் அவர்களைப்பற்றி திமுக-வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா உண்மைக்கு புறம்பான, அவதூறு செய்திகளை பேசியதை கண்டித்து இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர்-தலைவர் திரு.ராகம் மா.சௌந்தரபாண்டியன் அவர்களின் கண்டன அறிக்கை:
நேற்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவரிடம் சொல்லியதாக சொல்லி சில கருத்துக்களை உளறிக்கொட்டியுள்ளார். அப்போது தனது சிறுவயதில் அவர் கலைஞர் கருணாநிதியுடன் காரில் சென்றதாகவும், கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஏ/சி இல்லாமல் தூங்கமாட்டார் என்றும் ஆகவே, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருக்கு அரசு தங்கும் விடுதிகளில் ஏ/சி அமைத்துக்கொடுத்ததாகவும், அதேபோல எமர்ஜென்சி காலத்தில் அவரை திருப்பதிக்கு சென்றால் கைது செய்துவிடுவார்கள் என்கிற காரணத்தால் அவரை திருப்பதிக்கு செல்லாமல் தடுத்தததாகவும், அதுமட்டுமில்லாது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனது சாகும் தருவாயில் இறுதி நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு ”நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியதாகவும் சொல்லி இருப்பது அவர் பொய்யை பேசுவது மட்டுமே தொழிலாக கொண்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் நபர் என்பதையும், கீழ்த்தரமான, தரமற்ற அவரது இயற்கையான இயல்ப்பை வெளிக்காட்டியிருக்கிறது.
கர்மவீரர் அவர்கள் இன்றுவரை எவராலும் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு உயரிய குணங்களுக்கு சொந்தக்காரராக அரசியலிலும் பொது வாழ்விலும் திகழ்பவர். அவர் தனது எளிமையான வாழ்க்கைமுறையால் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரமாக வாழ்ந்து காட்டியவர். அவரை பேசுவதற்கு திருச்சி சிவாவிற்கு என்ன தகுதி இருக்கிறது. சிவாவின் ஒழுக்கமற்ற வாழ்வியல் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை இழந்த நேரத்தில் ஒழுக்க சீலர் போல கவிதை கதை வடித்து விட்டு சில மாதங்களுக்கு பின்னர் இன்னொருவர் மனைவியுடன் இருந்த ஆபாச வீடியோ வெளிவந்து அவரது வண்டவாளம் தண்டவாளம் ஏறிய கதையை இந்த உலகமே அறியும். அதுமட்டுமல்ல, தனது பேச்சு திறமையை பதவிக்காக மானங்கெட்ட வகையில் விற்றுப்பிழைப்பவர் என்பதை இந்த நாடறியும்.
நாடே போற்றும் ஒரு நல்ல தலைவரை, மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக கிங் மேக்கராக வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களை மட்டுமே குறிப்பிடமுடியும். பெருந்தலைவர் காமராஜர் அவர்களையே இன்றளவும் பல அரசியல் கட்சியினரும் தமிழகத்தில் அவரை போன்ற ஆட்சியமைப்போம் என்று சொல்லும் நிலையில் இந்த நாடு இருந்து வருகிறது. அவருக்கு ஈடாக சொல்வதற்கு இன்று எவருமில்லை என்பதே நிதர்சனம். அவர் ஒரு அவதார பிறவி. அவருக்கு இணை அவரே.
இதைப்போன்ற தரக்குறைவாக பேசும் திருச்சி சிவா போன்றவர்களை தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதல்வருமாகிய மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக கட்சியை விட்டு நீக்கவேண்டும் அது மட்டுமில்லாது அவர் மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்திய நாடார்கள் பேரமைப்பு வலியுறுத்துகிறது. திருச்சி சிவா அவர்களின் இத்தகைய பேச்சு ஒட்டுமொத்த நாடார் சமுதாய மக்களையும் மிகவும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உடனடியாக அவர் தனது பேச்சிற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அரசு அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும், தமிழக முதல்வர் திருச்சி சிவா அவர்கள் திமுகவை சேர்ந்தவர் என்பதற்க்காக அவர் மீது எந்தவித பாகுபாடும் காட்டினால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு ஒட்டுமொத்த நாடார் அமைப்புகளையும் ஒன்று திரட்டி, திருச்சி சிவாவை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதனையும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.