திரை விமர்சனம்: கெவி

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள ஒரு சிறு கிராமம் தான் கெவி. இன்று வரை இங்கு உள்ள மக்களுக்கு சாலை வசதிகளோ மருத்துவ வசதிகளோ எதுவுமே கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இவர்களின் ஓட்டுக்காக மட்டுமே வந்து போகும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததும் அந்த கிராமத்தை மறந்து விடுகிறார்கள்.
திடீரென்று ஏற்படும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உயிரைக்கூடக் காப்பாற்ற முடியாத ஆதங்கத்தில் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதியிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும்
கடும் வாக்குவாதம் செய்கிறார் மலையன். வார்த்தைகள் முற்றி கைகலப்பாகி அரசியல்வாதியும் போலீசும் அவமானப்படும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
அதிகாரத்தின் வலிமையை அப்பாவிகளுக்கு புரிய வைக்க வெறிகொண்டலைகிறது காக்கி சட்டைகள். இந்த நேரத்தில் மலையனின் மனைவி மந்தாரை பிரசவ வலியில் துடிக்க வேறு வழியில்லாமல் டோலி கட்டி மலைப்பாதையில் கிராமத்து மக்கள் தூக்கி வருகின்றனர். ஆறு மணி நேரம் நடந்தால் மட்டுமே மருத்துவமனையை அடைய முடியும் என்ற சூழ்நிலையில் பணிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடிக்கிறார் மந்தாரை.
விஷயம் தெரியாமல் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மலையன் போலீஸாரிடம் சிக்கிவிட அவரை அடித்து துவைத்து உயிரோடு எரித்து கொல்லப் பார்க்கின்றனர்.
மந்தாரைக்கு குழந்தை பிறந்ததா ? மலையன் உயிர்பிழைத்தானா என்பது க்ளைமாக்ஸ்.
மலை கிராமத்து மக்களின் வலியும் வேதனையும் காட்சிகளில் மட்டும் அல்ல வசனங்களிலும் வியாபித்து நிற்கிறது. கதை நாயகன் ஆதவன் நடிப்பு மிகுந்த எதார்த்தம். கதை நாயகி ஷீலா ஒவ்வொரு காட்சியிலும் கண்கலங்க வைக்கிறார். அதுவும் ஸ்பெஷல் மேக்கப்பில் உருவான பெரிய வயிறும் அதற்குள் குழந்தை அசைவதை பார்த்து மகிழ்ச்சியடையும் காட்சி நெகிழ்ச்சி. இந்த படத்திற்காக ஷீலாவுக்கு சில விருதுகள் கிடைக்கும். அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி, கிராமத்து மக்கள் என அரிதாரம் பூசாத முகங்கள் கதையோடு ஒன்ற வைக்கிறது. ஜெகன் ஜெயசூர்யா வின் பரபரப்பான இரவு நேரத்து ஒளிப்பதிவு ம் பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசையும் அவ்வப்போது ஒலிக்கும் வைரமுத்து மற்றும் யுகபாரதியின் பாடல் வரிகளும் நம்மையும் கண்ணீரோடு அந்த மலைப்பாதையில் நடக்க வைக்கின்றன.
“ஒரு ஊரின் அடிப்படை தேவை” என்ற ஆர்ட் ஃபிலிம் கதையை முழு திரை ப்படமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன். உண்மை சம்பவங்கள் அடிப்படையில் ஓர் உணர்ச்சிப் போராட்டத்தை நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
பின் பாதியில் காட்சிகளின் நீளம் கொஞ்சம் குறைக்கப்பட்டு இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஒரே கருத்தை திரும்பத் திரும்ப பேசுவதையும் தவிர்த்திருக்கலாம்.
கெவி…. மலைவாழ் மக்களின் வலி. இந்த திரை மொழியாவது கிழிக்கட்டும் அரசு எந்திரங்களின் செவிப்பறையை.
THANDORA TODAY.COM
RATING: 3/5