கஷ்ட காலங்களில் எனக்கு துணை நின்றவர்: “சினிமாவை உயிராக நேசித்தவர் ஏவிஎம் சரவணன்”! அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கம்!!
தென்னிந்திய சினிமாவில் ஆலமரம் இன்று சொல்லப்படும் ஏவிஎம் நிறுவனம் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மொழிகளில் தயாரித்திருக்கிறது. ஏவி மெய்யப்பன் செட்டியார் தொடங்கிய இந்நிறுவனத்தை அவரின் மகன் ஏவிஎம் சரவணன் திறம்பட வளர்த்தெடுத்தார் என்பதை திரையுலகம் நன்கறியும். அவர்கள் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” படத்தை பிரமாண்டமாக தயாரித்தனர்.
வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏ வி எம் சரவணன் இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 3:30 மணி அளவில் ஸ்டுடியோவின் பின் பக்கம் உள்ள மயானத்தில் அவருடைய உடல் அடக்கம் நடைபெறுகிறது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். சில நிமிடங்கள் ஏவிஎம் சரவணன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் எம் எஸ் குகன் எஸ் பி முத்துராமன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், “மிகப்பெரிய மனிதர்… ஜென்டில்மேன் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்… எப்போதும் வெள்ளை உடை தான் அணிவார். அதைப்போலவே அவர்களுடைய உள்ளமும் வெள்ளைதான்…ஒரு பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தாலும் 10 முறை அப்பாச்சி அப்பாச்சி என்று தன் தந்தையாரை பற்றி பெருமையாக சொல்வார் … சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர்… என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்…என் நலம் விரும்பி. என் கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக நின்றவர். ஏவிஎம்மில் நான் ஒன்பது படங்களில் நடித்திருக்கிறேன்… அந்த ஒன்பது படங்களும் சூப்பர் ஹிட் .. அதற்கு காரணம் சரவணன் சார் தான் என்றால் மிகை ஆகாது… எண்பதுகளில் முரட்டுக்காளை பெரிய படம்…. அப்புறம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது “சிவாஜி”. அதைவிட பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம்….” என்று உருக்கமாக கூறினார்.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நடிகர்கள் சூர்யா சிவகுமார் நடிகை கே ஆர் விஜயா இயக்குனர்கள் பி.வாசு, வசந்த், கணேஷ் பாபு கவிஞர் வைரமுத்து ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
![]()

