திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் பரபரப்பு: விலை பேசப்படும் பதவிகள்! தலைவர் நாற்காலிக்கு நான்கு பேர் போட்டி!!
வருடத்திற்கு சுமார் 3000 கோடி பணம் புரளும் தமிழ் திரைப்படத் துறையின் முக்கியமான அமைப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு கிப்ட் கொடுக்கும் கலாச்சாரம் சங்கத்தில் நுழைந்து பின்னர் அதுவே போட்டியிடும் அணியின் சார்பில் 20000 ரூபாய், தங்க நாணயம் என்று கொடுத்து வாக்காளர்களை ஓட்டு வியாபாரிகளாக்கியது. நிரந்தர உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு கல்விநிதி திருமண நிதி மருத்துவ உதவி மூத்த தயாரிப்பாளர்களுக்கான மாதாந்திர அன்புத்தொகை தீபாவளி பொங்கல் பரிசுகள் என சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பெரும் செலவு செய்ய வேண்டி இருப்பதாலும், வெற்றியை தீர்மானிக்கும் சக்தி சமீபத்தில் படம் எடுக்காத, திரைப்படத் துறையில் உருவாகும் புதிய பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாத உறுப்பினர்களின் கையிலேயே இருப்பதாலும் விரக்தி அடைந்த பாரதிராஜா சத்யஜோதி தியாகராஜன் டி சிவா ஞானவேல் ராஜா எஸ் ஆர் பிரபு பிரகாஷ் பாபு உட்பட தொடர்ச்சியாக படம் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் தனியாக பிரிந்து சென்றனர். பாரதிராஜா தலைமையில் “நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்” என்ற புதிய அமைப்பை உருவாக்கி நடத்தி வருகின்றனர்.
“கடந்த ஐந்து வருடங்களாக பதவியில் இருக்கும், திமுக அரசுக்கு நெருக்கமான முரளி ராம நாராயணன் தலைமையிலான நிர்வாக குழு தயாரிப்பாளர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை” என்ற குமுறல் இருந்து கொண்டே இருக்கிறது. சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளும் மானியங்களும் கூட பல வருடங்களாக வழங்கப்படாமல் இருப்பது பலரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த நிர்வாகிகளே தற்போது மூன்று பிரிவுகளாக பிரிந்து மீண்டும் போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர்களின் நலனைக் காக்க அனைத்து சங்கங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு வலிமையான சங்கம் வலிமையிழந்து கிடக்கிறது. இதனால் தயாரிப்பாளர் என்கிற முதலாளியிடம் சம்பளம் வாங்குபவர்கள் கூட சங்க நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அவலநிலை உறுப்பினர்களை வேதனைப்பட வைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் 2026 – 2029 க்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஓர் அணியும் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடப் போவதாக தகவல் பரவியது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. இருவரும் ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையிலான “தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி”யில் இணைந்து விட்டனர்.இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு முன்னணி தயாரிப்பாளர் தான் பின்னணியில் இருந்து இந்த அணியை கட்டமைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பல கோடிகள் செலவழிக்கப்படுவதாகவும் பலர் விலைக்கு வாங்கப்படுவதாகவும் தயாரிப்பாளர் வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய தலைவர் முரளி “ராம நாராயணன் அணி” சார்பில் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். கதிரேசன், மன்னன் ஆகியோர் தனியாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
1524 தயாரிப்பாளர்கள் வாக்களிக்கும் தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி அண்ணா நகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழுவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலர் மட்டுமே தீர்க்கமாக ஒற்றை பொறுப்புக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக செயலாளர் துணைத் தலைவர் பதவியை வகித்து வரும் பைவ் ஸ்டார் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் தவிர தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பொருளாளர், செயலாளர், துணைதலைவர் பொறுப்புகளுக்கு JSK சதீஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பொருளாளர், துணை தலைவர் பொறுப்புக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் விடியல் ராஜூ.
பொருளாளர், துணை தலைவர் பொறுப்புக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் C. விஜயகுமார்,
செயலாளர், துணை தலைவர் பொறுப்புக்கு T.D ராஜா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போதைய தலைவர் முரளி ராமசாமி, லைகா நிறுவனத்தின் இணைத்தயாரிப்பாளரும் சங்கத்தின் தற்போதைய துணை தலைவருமான ஜிகேஎம் தமிழ்குமரன், முன்னாள் செயலாளர் மன்னன், ஆகிய மூவரும் தலைவர் பொறுப்புக்கு மட்டும் மனு செய்துள்ளனர்.
பொருளாளர் பொறுப்புக்கு மட்டும் சுபாஷ் சந்திர போஸ்,
செயலாளர் பொறுப்புக்கு மட்டும் தற்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணன், கமீலா நாசர்,S.சௌந்தரபாண்டியன்,
இணை செயலாளர் பொறுப்புக்கு மட்டும் N. பன்னீர் செல்வம்,சுஜாதா விஜயகுமார்,விஜயசேகரன்,துணை தலைவர் பொறுப்புக்கு மட்டும் N.விஜயமுரளி, R.K.சுரேஷ்கமலக்கண்ணன்,விஜயகுமார்,மதியழகன், நடிகர் ஏ.எல். உதயா ஆகியோர்வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
26 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட 68 தயாரிப்பாளர்கள் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்து வேட்புமனு தாக்கல் தொடங்கி முடிவடைந்துள்ளது. தாங்கள் எந்த பொறுப்புக்கு போட்டியிட வேண்டும் என்பதைக் கூட தீர்க்கமாக முடிவு செய்யாமல் பலரும் பல்வேறு பொறுப்புகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறை. இது கடைசி நேரத்தில்
பேரம் பேசுவதற்காக இருக்குமோ என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
“முன்னாள் தலைவர்களான கே ஆர் ஜி, கே ஆர், ஆ செ இப்ராஹிம் ராவுத்தர் எஸ்ஏ சந்திரசேகரன், நடிகர் விஷால், கலைப்புலி எஸ் தாணு, ராம நாராயணன் ஆகியோர் தலைவர்களாக இருந்த போது சங்கத்திற்கு இருந்த மரியாதை மீட்டு எடுக்கப்பட வேண்டும்” என்று தங்கள் வாக்குகளை விற்க விரும்பாத தயாரிப்பாளர்கள் ஆசைப்படுகின்றனர்.
“முன்பெல்லாம் சங்கத்தின் பதவிக்கு வருபவர்கள் தங்கள் சொந்த பணத்தையும் நேரத்தையும் அனுபவ அறிவையும் செலவிட்டு உறுப்பினர்கள் நலனை பாதுகாப்பார்கள். ஆனால் இப்போது தங்களின் சொந்தப் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் கேடயமாகவே சங்கப் பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறுகின்றனர்.
வேட்புமனு வாபஸ் வாங்க இன்னும் 8 நாட்கள் இருப்பதால் வாபஸ் வாங்குவதற்கான கரன்சி பேரங்கள் இன்று முதல் சூடு பிடித்திருக்கிறது என்கிறது வாக்காளர் வட்டாரம். இதற்கிடையே நேற்று தமிழ்குமரன் அணியின் சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விருந்துடன் விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ் தாணு ஆர்கே செல்வமணி டைரக்டர் லிங்குசாமி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பொதுவா வாக்காளர்களுக்கு தானப்பா “விலை நிர்ணயம்” பண்ணுவீங்க…. இப்ப வேட்பாளர்களுக்குமா??
![]()

