தலை வலியாக மாறிய நயன்தாராவின் ஆவணப்படம்.. அனுமதியின்றி சந்திரமுகி படக்காட்சி.. மேலும் ஒரு வழக்கு!

நடிகை நயன்தாரா ‘Nayanthara beyond the fairy tale’ என்ற ஆவணப்படத்தை தனது பிறந்த நாளில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டு இருந்தார். இந்த ஆவணப்படத்தை நெட்ப்ளிக்ஸ் தளம் 25 கோடிக்கு வாங்கி இருக்கும் நிலையில், அந்த ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக படத்தின் பதிப்புரிமை பெற்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை நடிகை நயன்தாரா ஆவண திரைப்படமாக கடந்த ஆண்டு தனது பிறந்த நாளில் வெளியிட இருந்தார். இதன் டிரைலர் வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் 3 வினாடி காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா, தனுசை கடுமையாக விமர்சனம் செய்து கடிதம் வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. தனுஷுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், நயன்தாராவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து, ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி, வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இணைந்து தனுஷூக்கு எதிரான வழக்கை வாதிட்டு வருகிறார். அதில், நயன்தாரா தரப்பில் செல்போனில் இருந்த காட்சிகளை தான் நாங்கள் ஆவணப்படுத்தில் பயன்படுத்தினோம் என கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில், ‘Nayanthara beyond the fairy tale’ என்ற ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதால், ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, ‘சந்திரமுகி’ படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தனுஷின் நஷ்டஈடு கோரிய வழக்கு உள்ள நிலையில், மேலும் ஒரு நஷ்டஈடு வழக்கு வந்துள்ளதால், நயன்தாரா தரப்புக்கு இது தலைவலியாக மாறி உள்ளது.