தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 26ல் ” புதுப்பேட்டை”! 4k தரத்தில் “கொக்கி குமார்” ரிட்டர்ன்ஸ்!!

தமிழ் சினிமா நடிகர்களில் தனுஷ் மிகவும் தனித்துவமானவர் . தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் கடந்து தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என பல முகங்கள் அவருக்கு உண்டு.
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாட்டில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவுடன் 4 கே தரத்தில் இப்படம் வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘புதுப்பேட்டை’. தமிழ்சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை புதுப்பேட்டைக்கு முன் – பின் என வகைப்படுத்தும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் கதாபாத்திரங்களின் உளவியல் ஆழத்தையும், சமூக அமைப்பின் தாக்கத்தையும் எடுத்துக்காட்டியது. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் என அழைக்கப்படும் இப்படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பேட்டை படத்தை ரீ மாஸ்டரிங் செய்து 4K தரத்தில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இப்படத்தை திருமதி S .விஜய நிர்மலா சரவண பவா ஆகியோர் விஜய் சூர்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரீ -ரிலீஸ் செய்கிறார் .