துப்பாக்கி சூடு நடத்துவதற்கு பனைத் தொழிலாளி என்ன தீவிரவாதியா? போலீஸார் மீது கடும் நடவடிக்கை வேண்டும்! மணிகண்டனை சந்தித்த பின் எர்ணாவூர் நாராயணன் பேட்டி!!

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு பனைத் தொழிலாளி என்ன தீவிரவாதியா?  போலீஸார் மீது கடும் நடவடிக்கை வேண்டும்!  மணிகண்டனை சந்தித்த பின் எர்ணாவூர் நாராயணன் பேட்டி!!

தென்காசி  மாவட்டம், ஆலங்குளம், மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் அவர்களின் மகன் மணிகண்டன் என்பவர் பனைத் தொழில் செய்து வருகிறார். ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா என்பவர், மணிகண்டன் கள் வியாபாரம் செய்வதாகக் கூறி அவரது வீட்டை சோதனையிட்டுள்ளார். மேலும் பனை தொழில் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளார். அப்போது மணிகண்டனின் தந்தையும் அவரது சகோதரனும், சகோதரனின் மகளும் இருந்துள்ளனர். சாதாரண உடையில் வந்த சார்பு ஆய்வாளார் இசக்கிராஜாவிற்கும் மணிகண்டனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இசக்கிராஜா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மணிகண்டனை சுட்டுள்ளார். மணிகண்டனின் இருகால்களிலும் குண்டடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனை சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். பின்னர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்டு உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக இதுகுறித்து கேட்டறிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறை ஆய்வாளர் மற்றும் உடன் இருந்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யவும் ,சஸ்பெண்ட் செய்யவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனடியாக வழக்கு பதிவு செய்து சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே நான் தமிழக முதல்வரையும் , முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களையும் சந்தித்து “பனைத் தொழிலாளிகள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தக் கூடாது அவர்கள் தொழிலுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது” என மனு அளித்த நிலையில் தமிழக முழுவதும் பனை தொழிலாளர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தொழில் செய்து வந்தனர். தற்போது மணிகண்டன் மீது தீவிரவாதிகள் மீது தாக்கல் நடத்தியது போன்று இச்சம்பவம் அமைந்துள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். கடந்த வாரம், காவல்துறையினரால் தாக்கப்பட்டு தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக தற்போது காவல்துறையினர் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இது மிகவும் வேதனைக்குரியது. அவரது துணைவியாருக்கு அரசு பணியிடம் வாங்க வேண்டுமென தமிழக அரசிடம் பரிந்துரைக்கிறேன். மேற்படி பனை தொழிலாளர் மணிகண்டனுக்கு மேற்படி உதவிகள் அனைத்தும் செய்வதாக எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *