நாடார்கள் ஓட்டு யாருக்கு? : அரசியல் சக்தியாக உருவெடுக்க நாம் ஒன்றிணைய வேண்டும்! ராகம் சௌந்தரபாண்டியன் அறிக்கை!!
இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர் – தலைவரான ராகம் எம். சௌந்தரபாண்டியன், வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நிலைப்பாடு குறித்தான அறிக்கை :
வருகிற 23-04-2026 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பரப்புரைகளை தமிழகத்தில் உள்ள அந்தந்த மாநில, தேசிய கட்சிகள் செய்து வருகின்றன. தொடர்ந்து நாடார் இனத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாய பாதுகாப்பிற்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், பொது நல நோக்கோடு செயல்பட்டுவரும் நமது இந்திய நாடார்கள் பேரமைப்பு தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து நிர்வாகக்குழு மற்றும் மாநில, மாவட்ட, மற்றும் அணைத்து பகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கீழ்கண்ட அறிவிப்பை வெளியிடுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள், மாநிலத்தில் உள்ள சாதி, மதம் மற்றும் இன-புவியியல் அடையாளங்களில் நிலவும் பிளவுகளையும், தேர்தல் அரசியலில் அவற்றின் முக்கியத்துவத்தையும் மறுமதிப்பீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இந்த சூழலில் நமது நாடாரினம் மிகப்பெரிய வலிமையை கொண்டு தமிழகத்தில் கிட்டத்தட்ட 75 தொகுதிகளுக்கு மேலாக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக அணைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டு விளங்குகிறது. நம்மை புறக்கணித்து ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ, தேர்தல் களத்தில் போட்டியிட முடியாது.
இருந்தபோதிலும், இன்றைக்கு வரைக்கும் நமது நாடார் சமுதாயத்திற்க்கான உரிய அங்கீகாரம் என்பது முழுமையாக கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள் நம்மை பயன்படுத்திவிட்டு உதறி தள்ளிவிடும் வரலாற்றை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அரசியல் இயக்கங்களில் உள்ள நமது சமுதாய நிர்வாகிகள், வேட்பாளர்கள் தான் சார்ந்திருக்கிற சமுதாயத்தினை மறந்து அந்தந்த இயக்கங்களின் நிர்வாகிகளாகவே செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களில் சிலர் நமது நாடார் சமுதாயத்திற்கு சாதகமான நிலைப்பாட்டுடன் இருந்தபட்சத்தில் அவர்கள், அவர்கள் சார்ந்த இயக்கத்தின் தலைமையால் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த தேர்தலில் கூட திமுக, அதிமுக கூட்டணியில் இருந்த திரு.எர்ணாவூர் நாராயணன் மற்றும் திரு. என்.ஆர்.தனபாலன் போன்ற தலைவர்கள் அவர்களுக்கான உரிய பங்கீட்டை பெற முடியவில்லை.
இந்த நிலைக்கு யார் காரணம்..? நாம் தான்.. நாம் மட்டும் தான் என்பதே எதார்த்த நிலை. இந்திய நாடார்கள் பேரமைப்பு தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றும் வலியுறுத்தி வந்த பிரதான கொள்கை என்பது அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். இது சம்பந்தமாக நாம் பல்வேறு முயற்சிகள் எடுத்தபோதிலும் நமக்குள்ளான கருத்து வேறுபாடுகளால் தொடர்ந்து பிரிந்து கிடக்கின்றோம். மதுரை நாடார் மகாஜன சங்கம் போன்ற தொன்மையான பெரிய சங்கங்கள் கூட எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன.
நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ பொறுத்தவரை இந்திய நாடார்கள் பேரமைப்பு “நாடார் வேட்பாளர்களை ஆதரிப்போம்” – “நாடார் வாக்குகள் நாடாருக்கே ” என்கிற நிலைப்பாட்டின் அடிப்படையில் கட்சிக்கு அப்பாற்பட்டு, நமது சமுதாய வேட்பாளர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் அவர்களுக்கு நமது வாக்குகளை செலுத்துவோம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில தொகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடார் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் அந்த தொகுதியில் நிலவும் பிரச்சனைகளின் அடிப்படையில் அவர்களில் சிறந்த வேட்பாளர்கள் யார் என்பதை தீர்மானித்து வாக்களிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நமது சமுதாயத்தினை சார்ந்த அணைத்து பெருமக்களும் இதே நிலைப்பாட்டுடன் தங்களது வாக்குகளை செலுத்தி நமது நாடாரின வேட்பாளர்கள் வெற்றிபெற உழைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அதே நேரத்தில், இந்த தேர்தலுக்கு பின்பாக நமது சமுதாய மக்கள் அனைவரும், கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள், மதங்கள், வாழும் மாவட்டங்கள் இவற்றையெல்லாம் கடந்து “நான் நாடார்” என்கிற ஒற்றை நோக்கோடு ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களது அன்பான வேண்டுகோள். நமது சக்தியை இந்த உலகு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நம் கைகள் ஒன்றிணைய வேண்டும். நமது குரல்கள் ஒரே ஓசையுடன் ஒலிக்க வேண்டும். நமது எண்ணங்கள் ஒன்றாக வேண்டும். தொழிலிலும், வியாபாரத்திலும் வேலையிலும், சாதனைகளை படைத்தது நமது நாடார் இனம். இன்றைக்கும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற மேலை நாடுகளில் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் நம் இனத்தவரே கொடிகட்டி பறக்கின்றனர். இந்தியாவிலும் நாம் இல்லாத துறையே இல்லை என்கிற அளவிற்கு வெற்றிக்கொடி நாட்டி வருகின்றோம். நமது சமுதாயத்தை சார்ந்த சாதனையாளர்கள் எண்ணிக்கையின் அளவைப்போல மற்ற இனத்தில் இருந்ததில்லை.
இன்றும் ஏராளமான சாதனையாளர்கள் உருவாகி வருகின்றனர். எதையும் சிறப்பாகவும், முறையோடும், ஒழுக்கத்துடனும் செய்து அதில் வெற்றி காண்பவர்கள் என்றால் நம் நாடார் இனத்தவர் தான். நம்மை பலரும் இன்றைக்கு முன்னுதாரணமாக கொண்டு அவர்கள் வாழ்வில் வெற்றிபெற்று வருகின்றனர்.
நமது நாடார் சமுதாயத்தினர் தாய் மொழி மீதும் தாய் மண் மீதும், பொது நலன் மீதும் மிகுந்த பற்றும் அக்கறையும் கொண்டவர்கள். இந்திய வரலாற்றில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய மாற்றங்கள், புரட்சிகள், வளர்ச்சிகள், சாதனைகள் ஆகியவற்றை நிகழ்த்தியவர்கள் அதிக அளவில் நமது நாடாரினத்தை சேர்ந்தவர்களே ஆவார்கள். சில அந்நிய சக்திகள் வரலாற்றில் அவற்றை மறைக்க முயன்றாலும் நாம் அதை அனுமதிக்காமல் தொடர்ந்து போராடி மக்களுக்கு கொண்டு சொல்லவேண்டியது நமது கடமையும் பொறுப்பும் ஆகும். பல்வேறு துறையிலும் சரித்திர சாதனைகளை நிகழ்த்தி ஈடு இணையற்ற உயரத்தில் தன்னை நிலை நிறுத்திக்காட்டியவர்கள். இன்றும் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருப்பவர்கள்.
நம்மால் முடியாதது ஏதுமில்லை…. நம்மால் முடியாதது எவராலும் முடியாது. என்பதே உண்மையான வரலாறு, நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஆளுமைமிக்க ஒரே சக்தியாக மாறி அரசியலிலும் சாதனை படைப்போம் என்பதனை நிரூபிக்க, உலகிற்கு உணர்த்த காலம் நெருங்கி விட்டது. நமக்கு பின் வரும் நமது சந்ததிகளுக்கு நல்வழி காட்டி செல்வோம்.. மனதால் ஒன்றாக சிந்திப்போம். மாற்றத்தை நிகழ்த்துவோம்..
காலத்தை கையில் எடுப்போம்..! மாற்றாருக்கு நாம் யார் என்பதை புரிய வைப்போம் ….!
இனிமேலும் நாம் பிரிந்து கிடந்தது போதும். ஒன்று படுவோம்..! வென்று காட்டுவோம்..!!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![]()

